ங்கும் நீக்கமற நிறைந் திருக்கும் எம்பெருமான் பல தலங்களில் தான்தோன்றி ஈசனாக அருள்பாலிலிக்கிறார். காவிரியின் இருகரைகளிலும் உள்ள சிவத்தலங்கள் 108-ல் 55-ஆவது தலமாக விளங்குகிறது கீழப்பழுவூர். இங்கு அம்மை அருந்தவநாயகியுடன் அருளாட்சி செய்கிறார் இறைவன் ஆலந்துறையார்.

Advertisment

பழு என்றால் ஆலமரத்தைக் குறிக்குமாம். ஆலமரங்கள் சூழ்ந்த காடாக விளங்கியதால் இவ்வூர் பழுவூர் என்று பெயர் பெற்றது. இங்கு தோன்றிய இறைவனுக்கும் ஆலந்துறையார் என்ற பெயர் உருவாகியுள்ளது என்கிறார் கள் ஊர்ப் பெருமக்கள். உலக நன்மைக்காக ஊசிமுனையில் நின்று இறைவனை வேண்டித் தவமிருந்ததால் அம்மைக்கு அருந்தவநாயகி என்று பெயர் உருவானாதாம்.

karunaiyalan

முழுமுதற்கடவுளான விநாயகர் இங்கு நர்த்தன விநாயகராக வீற்றிருக்கிறார். கஜமுகாசுரனை வதம்செய்த விநாயகர் அந்த மகிழ்ச்சியில் நடனமாடியபடியே இங்கு வந்துள்ளார். மேலும் இவ்வூரில் "ஓம்' எனும் வடிவ அமைப்பில் விநாயகருக்கு ஆலயங்கள் அமைந்துள்ளன என்பது வியப்பான செய்தி.

Advertisment

பரசுராமருக்கு தோஷம் நீங்கிய தலமிது. ஜமதக்னி முனிவரின் மகன் பரசுராமர். இவரது தாயான ரேணுகாம்பாள் ஒருமுறை வான்வழியே சென்றுகொண்டிருந்த கந்தர்வனின் நிழல் நீரில் தெரிந்ததை தற்செயலாகப் பார்த்து, "நிழலிலிலேயே இவ்வளவு அழகானவனாக இருக்கும் இந்த ஆண் நிஜத்தில் இன்னும் எவ்வளவு அழகனாக இருப்பானோ' என்று மனதில் ஒரு கணம் எண்ணி னாள். இதனை தவஞானத்திலிலிருந்து உணர்ந்த முனிவர், மனைவியின் கற்புநெறிக்கு பங்கம் வந்ததுவிட்டதாக எண்ணிக் கோபமுற்றார். அதேநேரம் பரசுராமர் அங்கே வர, ""மகனே, என் கட்டளையை நிறைவேற்றமுடியுமா?'' என்றார். ""தந்தையே, உங்கள் பேச்சை மீறமாட்டேன். என்ன செய்யவேண்டும்?'' என்று கேட்க, ""உனது தாய் ரேணுகாவின் தலையை வெட்டி வீசவேண்டும்'' என்றார். அவரும் மறுவார்த்தை பேசாமல் தாயின் தலையை சீவி எறிந்தார். மகனின் உறுதியை மெச்சிய முனிவர், ""மகனே, உனக்கு என்ன வரம் வேண்டும்?'' என்றார். பரசுராமர், ""தந்தையே என் தாயை உயிர்பித்துத் தரவேண்டும். அதுவே என் வரம்'' என்றார். அதன்படியே வரமளித்தார் ஜமதக்னி முனிவர்.

எனினும் தாயைக் கொன்ற பாவத்தால் பரசுராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அதற்குப் பரிகாரம் என்னவென்று அவர் இறைவனை வேண்ட, வானுலகத்திலிலிருந்து ஒரு குரல், "யோகவனம் என்ற திருப்பழுவூர் சென்று சிவாலயத்தின் எதிரேயுள்ள பிரம்மதீர்த்தக் குளத்தில் நீராடி 32. யாக குண்டங்கள் அமைத்து பூஜை செய். உமக்கு அங்கே பாவவிமோசனம் கிடைக்கும்' என்றது. அதன்படியே பரசுராமர் பூஜை செய்தார். அப்போது சிவபெருமான் ரிஷப வாகனத்தில் காட்சி கொடுத்து பரசுராமரை ஆட்கொண்டார். அந்த இடம் கீழப்பழுவூர். இந்த நிகழ்ச்சியைப் படமாக வைத்துள்ளனர் ஆலயத்தில்.

திருநெல்வாயில் அறத் துறை (திருவட்டத்துறை) இறைவனைப்பாட குழந்தையான திருஞானசம்பந்தர் வரும்போது, அவரை அவரது தந்தை தோளில் வைத்துக்கொண்டு வந்தார். இந்தக் காட்சியைக் கண்ட இறைவன் அந்த ஊரிலுள்ள முக்கியஸ்தர்களின் கனவில் தோன்றி, "ஆலயத்திலுள்ள முத்துச் சிவிகை (பல்லக்கு), முத்துக்குடையை எடுத்துச்சென்று, நடந்துவரும் சம்பந்தனை அதில் அமரவைத்து தூக்கி வாருங்கள்' என்றார். அதன்படியே அவர்கள் அழைத்துவந்து அறத் துறைநாதரைப் பாடவைத்தனர். இந்த காட்சியை பழுவூர் இறைவனின் எதிரே இருந்த நந்தி வடக்குநோக்கித் திரும்பிப் பார்த்து மகிழ்ந்துள்ளது. இதன்காரணமாக நந்தி வடக்குநோக்கி முகத்தைத் திருப்பியபடி உள்ளது எங்கும் இல்லாத காட்சி. இந்தப் பகுதியை பழுவேட்டரையர்களான கண்டன், குமரன், மறவன் போன்ற சிற்றரசர்கள் ஆட்சி செய்துள்ளனர். அவர்கள் பெயராலேயே ஊருக்கு பழுவூர் என்ற பெயர் உருவானது. அங்கேயும் பெரிய சிவாலயம் உள்ளது.

Advertisment

karunaiyalanஅந்தப் பகுதி மேலப்பழுவூர் என்றும், ஆலந்துறையார் உள்ள இப்பகுதி கீழப்பழுவூர் என்றும் அழைக்கப்படுகிறது. அந்த சிற்றரசர்களின் இளவரசிகளை பராந்தகன், உத்தம சோழன், ராஜராஜசோழன் ஆகிய மன்னர்களுக்குத் திருமணம்செய்து கொடுத்துள்ளனர். மன்னர்கள் பெண்ணெடுத்த பெருமை பெற்ற ஊர் திருப்பழுவூர்.

பல திருத்தலங்களை தரிசித்துவிட்டு இவ்வாலய இறைவனை வழிபட்டுப் பாட வந்தார் திருநாவுக்கரசர். அப்போது ஆலயம் முழுவதும் நாவுக்கரசர் கண்களுக்கு சிவலிலிங்கங்கள் நிறைந்திருந்ததாம். இறைவனின் ஜடாமுடிகளும் பரந்துவிரிந்து கிடந்ததாம். இதைக்கண்ட நாவுக்கரசர் தனது கால்கள் அவை மீது படுமே என்று, நின்ற இடத்தில் இருந்தபடியே இறைவனைப் பாடிவிட்டு அப்பூதியடிகளைக் காணச் சென்றாராம்.

இந்தத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றிலும் சிறப்பு பெற்றது. இவ்வாலய முகப்பில் இடதுபுறம் சிறிய அளவில் மண்ணீஸ்வரர் ஆலயம் உள்ளது மிகமிகப் புதுமையானது என்கிறார்கள் ஊர்மக்கள். இவ்வாலயத்தில் இரண்டு தட்சிணாமூர்த்திகள் உள்ளனர். அதுபோல சிவதுர்க்கை, கல்யாண துர்க்கை என இரண்டு துர்க்கை உள்ளனர். இதில் கல்யாண துர்க்கைக்கு வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் வெகுவிமரிசையாக பூஜை நடத்தப்படுகிறது. திருமணத் தடையுள்ள ஆண்- பெண்கள் இந்த பூஜையில் கலந்துகொண்டால் தடைநீங்கி உடனடியாகத் திரு மணம் நடைபெறுகிறது. இப்படி தம்பதிகளானவர்கள் பல்லாயிரம் பேர் என்கிறார்கள் ஆலய அர்ச்ச கர்களான செல்வகுமார், ராஜாமணி ஆகியோர்.

மேலும், ஆண்டுதோறும் பங்குனி மாதம் 16, 17, 18 ஆகிய மூன்று நாட்கள் சூரியஒளி இறைவனின்மீது படும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. அனைத்து சிவாலய வழிபாடுகளும் மிகச்சிறப்பாக நடந்துவருகின்றன. இவ்வாலய இறைவன், இறைவி உட்பட அனைத்து தெய்வங்களையும் தரிசித்துச் செல்பவர்கள் சகல காரியங்களிலும் சித்தி பெறுகிறார் கள். தோஷநிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது. இவ்வாலய இறைவனை பிரம்மா, திருமால், இந்திரன், பாண்டவர், அகத்தியர், வசிஷ்டர், ரதிகாயமுகாசுரன், சந்திரன், காசிபர், வியாசர், சதாநந்தர் உட்பட முனிவர்களும் தேவர்களும் வழிபட்டுள்ளனர். இவ்வாலய இறைவன் ஆலந்துறையார், வடமூலநாதர், யோகவனேஸ்வரர் என்றும்; அம்பிகை தபசு அம்மாள், அருந்தவநாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

""உலகம் நலம்பெற அம்பிகை தவமிருந்து இறைவனை வழிபட்ட இடமிது. இவர்களை வழிபடுவோர் வாழ்க்கையில் துன்பம் மறைந்து செழிப்போடு வாழ்வார் கள். அனைத்து செல்வங்களும் கிட்டும்'' என்கிறார் தீவிர பக்தையான கலைச்செல்வி இளமுருகன்.

""இறைவனின் பெருமைகள் அளவற்றவை. அப்படிப் பட்ட இறைவன் கோவில் கொண்டுள்ள ஊரில் பிறந்து பல ஊர்களில் தங்கிப் பணிசெய்தோம். பணி ஓய்வுபெற்ற பலர் சென்ற இடங்களிலேயே தங்கிக்கொண்டார்கள். நாங்கள் மட்டும் பூர்வீக பூமியும், இறைவன் தானே தோன்றி மக்களைக் காக்கும் இடமுமாகிய எங்கள் ஊருக்கே வந்து குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ்கிறோம்- இறைவனை தினமும் தரிசித்தபடியே'' என்கிறார்கள் ஓய்வுபெற்ற காவலர் செல்வராசு மற்றும் அவரது சகோதரர்கள் சாரங்கன், ராதாகிருஷ்ணன் ஆகியோர்.

பசுவின் பால் முழுவதும் கன்றுக்கில்லை; பூக்களின் மணம் முழுவதும் செடிகளுக்கில்லை; நெல் விளையும் கதிர்கள் முழுவ தும் நிலத்திற்கில்லை; பழுத்து உதிரும் பழங்கள் முழுவதும் மரங்களுக்கில்லை; பண்ணிசை தரும் நரம்புகளின் இசை முழுவதும் யாழுக்கில்லை- இவையெல்லாம் பிறருக்கு என்பதை அறிவோம்.

அதுபோல இறைவனின் கருணையும் மக்களுக்காகவே! அமைவிடம்: தஞ்சை- அரியலூர் சாலையில் திருவையாறிலிருந்து வடக்கில் 18 கிலோமீட்டர்; அரியலூரிலிருந்து தெற்கே 12 கிலோமீட்டர்; ஜெயங்கொண்டத்திலிருந்து மேற்கே 40 கிலோமீட்டர்; திருச்சியிலிருந்து கிழக்கே 55 கிலோ மீட்டர் தொலைவில் அமைந் துள்ளது இவ்வாலயம். 24 மணி நேரமும் போக்குவரத்து வசதிகள் உள்ள ஊர்.

தொடர்புக்கு- அலைபேசி: 96775 59676, 87784 01314.